Mudaliarமுதலியார் சமூகம் தென்னிந்தியாவின் மிகத் தொன்மையான சமூகங்களில் ஒன்றாகும். முதலியார் என்ற வார்த்தைக்கு மற்ற சமூகங்களை வழி நடத்துபவர்கள் என்ற ஒரு பொருளும் சொல்லப்படுகிறது. இந்த தொன்மையான சமூகத்தின் உட்பிரிவுகள் செங்குந்தர், வெள்ளாளர், அகமுடையார், தொண்டைமண்டல சைவ வெள்ளாளர், ஆற்காடு துளுவ வெள்ளாளர், தொண்டைமண்டல கொண்டைகட்டி வெள்ளாளர், கைக்கோளர், கேரளா. ஹைதராபாத் மற்றும் பெங்களூருவில்  வழங்கப்படும் முதலி சமூகத்தினர், முதலியார், நாஞ்சில் முதலியார், தாராமங்கலத்தை சேர்ந்த கட்டி முதலியார் மற்று இலங்கையை சேர்ந்த முதலியார்கள் ஆகும்.

ஆரம்பத்தில் விவசாயத்தை மட்டுமே தங்கள் முதன்மைத் தொழிலாக கொண்டிருந்த முதலியார்களில் பெரும்பானோர் இப்போது அரசாங்க வேலை, தனியார் துறை, வியாபாரம், ஆராய்ச்சி மற்றும் அரசியல் என்று பலவேறு துறைகளிலும் கொடிகட்டிப் பறக்கின்றனர். வேறு சிலர் இந்தியாவின் மற்ற பகுதிகளிலோ அல்லது வேறு நாட்டிலோ சென்று குடியேறியுள்ளனர். முதலியார் சமூகத்தில் மரக்கறி உணவு மட்டுமே சாப்பிடுபவர்களும் மற்றும் புலால் சாப்பிடுவோரும் உண்டு. பலவேறு முதலியார் சமூகத்தினரிடைய நடக்கும் கல்யாணம் நிறைய சடங்குகள் உள்ளடக்கி விரிவான முறையில் நடத்தப் படுகிறது. சாதரணமாக கல்யாணத்தை நடத்தும் முறைகளில் சிறிது சிறிது மாறுபட்டு இருந்தாலும் முக்கியமான பொது நிகழ்வுகள் அனைத்து முதலியார்  சமூகத்தினராலும் அநேகமாக ஒரேமாதிரியாகவே கடைப் பிடிக்கப் படுகிறது. பொதுவாக எல்லா முதலியார் சமூகத்தினராலும் கல்யாணங்களில் நடத்தப்படும் சடங்குகளை இப்போது பார்ப்போம்.

நிச்சயதார்த்த நிகழ்ச்சி      

மணமகன் மணமகள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து, இரு வீட்டினரும் திருமணத்தை நடத்த முடிவு செய்தால் அதை உற்றோர் உறவினர் அனைவருக்கும் தெரிவிக்க நடத்துவது நிச்சயதார்த்தம். பொதுவாக இது பெண் வீட்டாரால் நடத்தப் படுவது. ஒரு நல்ல முகூர்த்த நாளை தேர்ந்தெடுத்து இதனை நடத்துவார்கள். நிச்சயதார்த்தத்தின் போது மணமகன் வீட்டார் பெண்ணுக்கு புடவை, நகைகள் இவைகளுடன் பலவேறு பழங்கள், உலர் பழங்கள் என்று 21 வரிசை தட்டுகளில் சீர் வைப்பார்கள். இத்துடன் சக்கரை, கல்கண்டு, மஞ்சள், தேங்காய், வெற்றிலை பாக்கு இவைகளையும் சீராக கொண்டு வந்தது வைப்பார்கள்.

நிகழ்ச்சியின் போது நிச்சயதார்த்த லக்ன பத்திரிகை (திருமண ஒப்பந்தம்) எழுதப்பட்டு அது வந்திருந்தோர் அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் படிக்கப்படும்.  அதில் முகூர்த்த நடத்த நிச்சயிக்கப் பட்ட நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு அதில் மணமகள் மற்றும் மணமகனின் பெற்றோர் இருவரும் உடன்படும் வகையில் கையொப்பமிடுவார்கள்.
பெண்வீட்டார் லக்ன பத்திரிக்கையை சில பரிசுப் பொருட்கள், பழம் மற்றும் தாம்பூலம் உள்ளத் தட்டில் வைத்து பிள்ளை வீட்டாரிடம் கொடுப்பார்கள் அதே போல் பிள்ளை வீட்டாரும் பரிசு, பழம் மற்றும் தாம்பூலம் உள்ளத்தட்டை தாங்கள் கையொப்பமிட்ட லக்ன பத்திரிக்கையுடன் பெண் வீட்டாரிடம் கொடுப்பார்கள். இதற்கு தாம்பூலம் மாற்றுதல் என்று பெயர். அந்த சமயத்தில் பெண்வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தங்கள் பெண்ணுக்கு கல்யாணத்தின் போது சீராக தரவுள்ள நகை, வீடு, நிலம் மற்றும் வாகனம் இவற்றை பற்றி இருவீட்டாரும் தெரிந்துக் கொள்ளும் வகையில் அறிவிப்பார்கள். பிறகு விருந்துடன் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நிறைவுக்கு வரும்.

பாரம்பரியமாக நடக்கும் எல்லா சடங்குகளையும் உள்ளடக்கிய ஒரு முதலியார் திருமணம் மூன்று நாட்கள் நடைபெறும். ஆகையால் திருமணம் நிச்சயமான பின்னர் இருவீட்டாரும் திருமணம் நடத்த நல்ல மண்டபத்தை தேர்வு செய்வது, கல்யாண விருந்தளிக்க நல்ல சமையல்காரரை ஒப்பந்தம் செய்வது, திருமண பத்திரிகை அச்சிட்டு அதை உறவினர், நண்பர்களிடையே விநியோகம் செய்வது போன்ற வேலைகளை செய்வார்கள்.
பாரம்பரிய வழக்கப்penpepபடி கல்யாணப் பெண்ணிற்கு கல்யாணம், மற்றும் வரவேற்பின் போது அணிந்துக் கொள்ள பட்டுப் புடவைகளை பிள்ளை வீட்டார் வாங்குவார்கள். கல்யாணப் பிள்ளைக்கு வேண்டிய கல்யாண உடை மற்றும் கோட் சூட், ஆகியவற்றை பெண்வீட்டார் வாங்குவார்கள். அதிகம் வசதியுடையவர்கள் தங்கள் உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் உடைகள் வாங்கி பரிசளிப்பது வழக்கம். சாதரணமாக இருவீட்டாரும் சேர்ந்து கல்யாணத்திற்கு வேண்டிய பொருட்களை வாங்குவது இப்போது வழக்கத்தில் உள்ளது.

பந்தக்கால்

முதலியார் சமூகத்தில் கல்யாணத்திற்கு ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் இருக்கும் போது கல்யாணப் பந்தக்கால் நாடும் நிகழ்ச்சி நடைபெறும். இது மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். மணமகள் மணமகன் இருவர் வீட்டிலும் நடக்கும் பந்தக்கால் விசெஷத்தின்போது முழு முதற்கடவுளான பிள்ளையாருக்கு உரிய பூஜை செய்து தாங்கள் தொடங்கிய கல்யாண காரியங்கள் தடங்கலின்றி நிறைவேற இருவீட்டாரும் வேண்டிக்கொள்வார்கள். பிறகு நான்கு கால்களுடைய ஒரு அலங்கரிக்கப் பட்ட பந்தல் வீட்டின் வாயிலின் முன் நிறுத்தி வைக்கப்படும்,

ஒன்பது வயதான சுமங்கலிப் பெண்கள் அந்தப் பந்தல் கால்களுக்கு ஒத்தப்படை எண் வரும் வகையில் மஞ்சள் மற்றும் குங்கும போட்டு வைத்து அலங்காரம் செய்வார்கள்.

மொளைக்கட்டுதல்

பின்னர் ஒரு நல்ல நாள் பார்த்து ஒன்பது தனித்தனி அலங்கரிக்கப் பட்ட பானைகளில் நவதானியங்களை தண்ணீரில் ஊறவைத்து மேலே வைக்கோல் போட்டு மூடி தானியங்கள் முளைக்க வசதியாக பானைகளைக் கவிழ்த்து வைப்பார்கள். சிறிது நாட்கள் கழித்து அந்த தானியங்கள் முளைத்தவுடன் அந்தப் பானைகளை சரியாக நிமர்த்தி வைத்து தானியங்கள் நேராக முளைக்க வசதி செய்வார்கள். இந்த முளைகட்டுதல் நிகழ்ச்சி மணமகள் மற்றும் மணமகன் வீட்டாரிடையே தோன்றும் புதிய உறவின் அடையாளமாக கருதப்படும். கல்யாணநாள் வரை அந்த முளைத்த விதை மற்றும் செடிகளுக்கு தண்ணீர் விட்டு பாதுகாத்து வளர்த்து வருவார்கள்.

நலங்கு

நலங்கு இருவீட்டு பெண்களும் கலந்துக் கொள்ளும் ஒரு முக்கியமான சடங்கு. ஒரு மணைப் பலகையில் கோலமிட்டு, அதன் மேல் ஒரு நுனி வாழை இலையை போட்டு, அந்த வாழை இலையில் அரிசியை பரப்பி அதன் மேல் மணமாகவிருக்கும் பெண்ணை உட்கார்த்தி வைப்பார்கள். அந்தப் பெண்ணின் அருகே மூன்று சிறிய முக்காலிகளில் முறையே சந்தனக் குழம்பு, குங்குமம், பன்னீர், வெற்றிலை பாக்கு, பழம், பூ மற்றும் ஆரத்தி தட்டு இருக்கும். வயதான சுமங்கலிபெண்கள் ஒவ்வொருவராக வந்து மணப்பெண்ணின் கைகளில் மற்றும் கன்னத்தில் சந்தானம் தடவி, நெற்றியில் குங்குமபொட்டு வைத்து, தலையில் பன்னீர் தெளித்து ஆரத்தி எடுத்து திருஷ்டி கழிப்பார்கள்.

மாப்பிள்ளை அழைப்பு  

பாரம்பரிய முறைப்படி நடக்கும் கல்யாணங்களில் மாப்பிள்ளையை அவரது வீட்டில் இருந்தோ அல்லது அருகில் இருக்கும் கோவில்தனில் இருந்தோ காரில் நாதஸ்வர இசை முழங்க ஊர்வலமாக அழைத்து வருவார்கள். அவர் கல்யாண மண்டபத்தின் உள்ளே நுழையும்போது அவரை மணப்பெண்ணின் சகோதரரோ அல்லது மாமாவோ மாலையிட்டு வரவேற்பார்கள். சில இடங்களில் மணப்பெண்ணின் சகோதரரோ அல்லது மாமாவோ மணமகனின் வீட்டிற்கே பரிசுகள், இனிப்பு மற்றும் பழங்களுடன் சென்று மாப்பிள்ளையை அழைப்பதும் உண்டு. மணமகன் கல்யாணமண்டபத்தின் உள்ளை நுழையும்போது மணப்பெண்ணின் வீட்டுப் பெண்கள் அவரை பாரம்பரிய முறைப்படி ஆரத்தியுடன் அழைப்பது வழக்கம். மண்டபத்தில் வந்தவுடன் திருக்கும் மணமகன் மற்றும் மணமகளுக்கு சிறிய அளவில் நலங்கு சடங்கு நடத்துவது உண்டு.

மங்கள ஸ்நானம்

மூங்கிலால் ஆனா ஒரு சிறிய பந்தல் திருமணம் நடக்கும் ஹாலுக்கு முன்னே காட்டப்படும். அந்தப் பந்தலில் வாழைமரம், தேங்காய் குலைகள் ஆகியவற்றை கட்டி மேலும் மாவிலைத் தோரணம் கட்டி பூவினால் அலங்காரம் செய்வார்கள். கல்யாண தினத்தன்று காலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பே மணமகன் மற்றும் மணமகளை இந்தப் பந்தலுக்கு அழைத்து வந்து அவர்கள் தலையில் நல்லெண்ணெய் வைத்து, கைகளில் மஞ்சள் பூசி கல்யாணத்தை வரவேற்று தயாராகும் வகையில் மங்கள ஸ்நானம் செய்ய வைப்பார்கள். அவர்கள் அணிந்திருந்த துணிமணிகளை தானமாக துணி வெளுப்பவர்களுக்கு கொடுத்து விடுவார்கள்.

அரசன்கால்

முதலியார் திருமணங்களில் அரசன்கால் நிகழ்ச்சி மிகவும் முக்கியமானது. இது இந்துக்களால் மிகவும் உயர்வாக மதிக்கப்படும் அரசமரத்திற்கு வணக்கமும் மரியாதையும் செலுத்துவதாக  அமைகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வயதான ஐந்து சுமங்கலிப் பெண்கள் இந்த நிகழ்ச்சியை நடத்துவார்கள். நடப்பட்டுள்ள அரசமரக் கிளைக்கு பூஜைகள் செய்த பின்னர் பந்தலின் முன்னால் நடப்பட்டுள்ள மூங்கில் கிளையை பாலினால் சுத்தம் செய்து, சந்தன குங்குமத்தால் அலங்காரம் செய்து, ஒரு பட்டுத் துணியை அதற்கு கட்டி பின்னர் ஆரத்தி எடுப்பார்கள். இந்த மூங்கில் பண்டைய காலத்தின் முதலியார் வீட்டு திருமணங்களுக்கு வந்து சிறப்பித்து, மணமக்களை ஆசீர்வாதம் செய்த அரசர்களை உருவகப்படுத்தும் விதமாக அமைகிறது, அன்று அரசர்களுக்கு அளித்த அதே மரியாதை இன்று அரசன்கால் என்றழைக்கப் படும் மூங்கிலுக்கு  அளிக்கப்படுகிறது.

பாதபூஜை

உள்ளே வந்த மணமகன் தனது தாய் தந்தையரை உட்கார வைத்து அவர்கள் கால்களை அலம்பி அவர்கள் காலினில் விழுந்து தனக்கு சிறப்பான மணவாழ்க்கை அமைய அவர்களது ஆசியை வேண்டுவான். அவர்களும் அவனை மனதார ஆசிர்வாதம் செய்வார்கள்.

காசியாத்திரை

நமது இந்து திருமண சாஸ்திரங்கள் கல்யாணமாகாத ஒருவனுக்கு அவன் விருப்பப்படி திருமணம் செய்துக் கொண்டு குடும்பஸ்தன் ஆகவோ அல்லது உலக இன்பங்களைத் துறந்து துறவறம் பூண்டு சந்நியாசி ஆவதற்கோ உரிமையை தருகின்றன. காசியாத்திரையின் போது மணமகன் தனக்கு கல்யாணம் வேண்டாம் என்றும் துறவறம் கொள்ளப் போவதாகவும் கூறி கையில் குடை, விசிறி, மற்றும் மூங்கில் கைத்தடியுடன் போக முயலுவான். அவனை மணமகளின் அப்பா கல்யாணம் செய்துக் கொள்வதின் பெருமையை சொல்லி தனது மகளை அவனுக்கு திருமணம் செய்துக் கொடுப்பதாகவும் கூறி அவனை கல்யாணத்திற்கு சம்மதிக்க வைப்பார். சில இடங்களில் மணமகளின் சகோதரன் அவ்வாறு திரும்ப வருமாறு அழைப்பதும் உண்டு.. தயக்கத்துடன் திரும்பும் மணமகனை ஆரத்தி எடுத்து உள்ளே அழைப்பார்கள்.

மகாலட்சுமி பூஜை பாத பூஜை

தமிழர் திருமணங்களில் திருமாங்கல்யம் மிகுந்த முக்கியமானது. மாங்கல்யம் செல்வத்தையும் வாழ்வில் வளத்தையும் அளிக்கும் மகாலக்ஷ்மியாக கருதப் படுகிறது. மணமகள் தனக்கு மகாலக்ஷ்மியின் பூரண அருள் கிடைக்க மாங்கல்யதிற்கு முதலில் பூஜை செய்வாள். பின்னர் தனது தாய்தந்தையரின் ஆசி வேண்டி அவர்களுக்கு பாத பூஜை செய்வாள்.

மகாலக்ஷ்மி மற்றும் பாத பூஜை செய்தபின்னர் மணமகள் தனக்கு மணமகன் வீட்டார் முகூர்த்தத்தின் போது கட்டிக்கொள்ள எடுத்துக் கொடுத்த முகூர்த்தப் பட்டினை கட்டிக் கொள்வாள். அதே போல் மணமகன் தனக்கு பெண் வீட்டார் எடுத்துக் கொடுத்த புது துணிகளைக் கட்டிக்கொள்வான். இருவரையும் மாலை அணிவித்து மணமேடைக்கு அழைத்து வாருவார்கள்.

கணபதி ஹோமம்

முழுமுதல் கடவுளான விநாயகப்பெருமானின் கருணையை, ஆசியை வேண்டி முதலில் கணபதி ஹோமத்துடன் கல்யாண நிகழ்சிகள் தொடங்கும். ஹோமம் முடிந்தவுடன் மணமகனுக்கு பூணல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடக்கும்.

மனைப்பொங்கல்

பாரம்பரிய முறைப்படி மணமகனின் பெற்றோர் கல்யாணத்திற்கென்று  தனியாக வாங்கப்பட்ட ஐந்து அல்லது ஏழு பானைகளில் பொங்கல் சமைப்பார்கள். பின்னர்  சமைத்த பொங்கலை மணமேடையில் இருந்து மணமக்களை ஆசிர்வதிப்பதாக சொல்லப்படும் எல்லா தெய்வங்களையும் வேண்டி நெய்வேத்தியம் (படையல்) செய்வார்கள். பின்னர் எல்லோரையும் விட வயதான சுமங்கலிப் பெண் மணமகனையும், மணமகளையும் திருமணப் பந்தலுக்கு கை பிடித்து அழைத்துச் செல்வார்.

கங்கணம்

திருமணத்தை நடத்த வந்துள்ள புரோகிதர் ஹோமத்தில் வளர்க்கப்படும் அக்னி சாட்சியாக திருமணத்தை நடத்துவார். முதலில் மணமகள் புரோகிதர் சொல்லியபடி மணமகனின் வலது கை மணிக்கட்டில் கங்கணம் என்று சொல்லப்படும் ஒரு சிறிய மஞ்சள் துண்டு இணைத்த மஞ்சள் கையிற்றை கட்டுவார். இது தன்னை தொடுவதற்கும் மனைவியாக கல்யாணம் செய்துக் கொள்ளவும் மணமகனுக்கு அவள் உரிமை தருவதின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அதே போல் மணமகனும் மணமகளின் மணிக்கட்டில் மஞ்சள் இணைத்த கங்கணத்தை கட்டுவார்.

கன்னிகாதானம்

கல்யாணத்தில் மிகவும் முக்கியமான சடங்குகளில் ஒன்று கன்னிகாதானம். மணமகளின் தந்தை வேதகோஷங்கள் முழங்க தனது மகளின் கையில் ஒரு மஞ்சள் பூசிய தேங்காயை வைத்து அவள் கையை மணமகனின் கையின் மேல் வைப்பார். அவ்வாறு வைப்பதின் மூலம் தனது மகள் மணமகனை சார்ந்து இருப்பாள் என்றும், அவளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு முழுக்க முழுக்க மணமகனை சார்ந்தது என்றும் சொல்லுதாக அர்த்தம்.

மாங்கல்ய தாரணம் (தாலி அணிவித்தல்)

மணமகன் மணமகளின் திருமாங்கல்ய சரடை கட்டுவது இருவரும் திருமணம் முடிந்து கணவன் மனைவி ஆகிவிட்டதை உணர்த்தும் சடங்கு. அந்த தாலிக் கயிறு மஞ்சள் பொடி கலந்த தண்ணீரில் நனைத்து உலர்த்தப் பட்ட 108 நூலிழைகளால் பின்னப்பட்டு அதில் புலிநகம் போன்ற ஒரு பதக்கம் இணைக்கப் பட்டு இருக்கும். பண்டைய நாட்களில் அந்த தாலியின் பதக்கத்தில் மணமகன் வீரத்துடன் கட்டிற்கு சென்று வேட்டையாடிக் கொன்ற புலியின் பல் அவனது வீரத்தின் அடையாளமாக  இணைக்கப்பட்டிருக்கும்.

முன்னரே நிச்சயிக்கப் பட்ட சுபமுகூர்த்த வேளையில் மங்கள நாதஸ்வர இசை முழங்க மணமகன் திருமாங்கல்யத்தை மணமகனின் கழுத்தில் அணிவிப்பர். மணமகன் முதல் முடிச்சைப் போட அவனது சகோதரி மேலும் இரண்டு முடிச்சுகளைப் போட்டு மணமகள் தங்கள் குடும்பத்தில் ஒரு அங்கமாக ஆகிவிட்டதை உறுதிப் படுத்துவார். மணமேடையில் இருக்கும் அனைத்துப் பெரியவர்களும் மங்கல அட்சதை தூவி மணமக்கள் நீண்டகாலம் ஒற்றுமையுடன் நல்வாழ்கை வாழ வாழ்த்துவார்கள்.

பட்டம்

திருமாங்கல்யத்தைக் கட்டி மாங்கல்யதாரணம் ஆனா பிறகு மணமக்கள் தாங்கள் அணிந்துக் கொண்டிருக்கும் மாலையை ஒருவருக்கொருவர் மூன்று முறை மாற்றிக்கொள்வார்கள். மணமகனின் மாமனும் மணமகளின் மாமனும் கயிற்றில் இணைக்கப் பட்ட பட்டையான தங்கத் தகடை முறையே மணமகன் மற்றும் மணமகளின் முன் நெற்றியில் கட்டுவார்கள். இந்த சடங்கு பட்டம் என்று அழைக்கப் படும்.

லஜ்ஜா ஹோமம்

கல்யாணத்தில் நடத்தப்படும் ஹோமங்களில் வழியாக நெருப்பிற்கு அதிபதியாக கருதப்படும் அக்னி தேவன் நடக்கும் கல்யாணத்திற்கு சாட்சியாக இருக்கிறான். தாலி கட்டி முடிந்தவுடன் லஜ்ஜா ஹோமம் தொடங்கும். ஹோமத்தின் பொது ஒன்பது வகையான மரக்கிளைத் துண்டுகள் நெய்யில் நனைக்கப்பட்டு ஹோம அக்னியில் இடப்படும். இது கல்யாணத்திற்கு சாட்சியாக இருந்த அக்கினி தேவனை திருப்தி படுத்தும் வகையில் நடத்தப் படுகிறது. பின்னர் மணமகனும் மணமகளும் ஒருவர் கையை ஒருவர் பற்றிக் கொண்டு ஹோம அக்கினியை மூன்று முறை சுற்றி வருவார்கள். பின்னர் மணமகளின் சகோதரன் தம்பதியினரின் கையில் நெல் பொரிதனை கொடுத்து அதனை அக்கினி தேவன் மனநிறைவு அடையும் வகையில் ஹோமத்தீயில் போடுமாறு சொல்லுவான். ஹோமம் முடிந்தப் பின்னர் மணமக்களை புரோகிதர் கற்புக்கரசியாக கருதப் படும் அருந்ததி நட்சத்திரம் இருக்கும் திசையை காட்டி பார்க்கச் சொல்வார்.

சேஷா சடங்கு

கல்யாணத்திற்கு வந்திருக்கும் முதியவர்களை வணங்கி அவர்கள் ஆசிர்வாதத்தை பெறுவதுதான் சேஷா சடங்கு ஆகும். மணமகன் மணமகளை மணப்பந்தலில் உட்காரவைத்து அவர்கள் முன்னால் ஒரு வெள்ளை துணியை விரித்து அதன் மேல் அரிசியை பரப்பி இருப்பார்கள். ஒவ்வொரு பெரியவராக வந்து கைநிறைய அரிசிதனை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு மணமக்களை ஆசீர்வாதம் செய்த பின்னர் அந்த அரிசியை மணமக்களுக்கு முன்னால் விரிக்கப் பட்டிருக்கும் வெள்ளை துணியில் போடுவார்கள்.

சம்பந்தி மரியாதை

மணமகன் மணமகள் இருவீட்டாரும்  தங்களிடையே பரஸ்பர அன்பும், மதிப்பும் வளர பரிசுப் பொருட்களையும், புது துணிமணிகளையும் பரிமாறிக் கொள்வார்கள். இதை சில குடும்பத்தினர் திருமணத்திற்கு முன்னறும் சிலர் திருமணம் முடிந்த பின்னரும் செய்வார்கள்.

கிரஹப்ரவேசம்

திருமணம் முடிந்த பின்னர் தம்பதியினர் முதல் முதலாக தாங்கள் புதிதாக குடும்பத்தை தொடங்கவுள்ள வீட்டிற்கோ அல்லது மணமகனின் வீட்டிற்கோ அழைத்துச் செல்லப் படுவார்கள். மணமகன் வீட்டார் மணப்பெண்ணை ஆரத்தி எடுத்து வீட்டிற்கு அழைப்பார்கள். பின்னர் வீட்டிற்கு வந்த அனைவருக்கும் விருந்துபசாரம் நடைபெறும்.

திருமண வரவேற்பு

சாதரணமாக திருமணம் நடந்த அதே நாளிலோ அல்லது வேறு வசதியான நாளிலோ திருமண வரவேற்பு நடைபெறும். அதற்கு உற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களை அழைத்து விருந்தளிப்பது வழக்கம்.

அறிவிப்பு

இந்தக் கட்டுரையில் கொடுக்கப் பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் பலவேறு மூலங்கள் மற்றும் ஆதாரங்கள் துணை கொண்டு தொகுக்கப் பட்டுள்ளன. இந்த விவரங்கள் எல்லாம் சரியானவை  என்றே நாங்கள் நம்புகிறோம். இந்தக் கட்டுரையை மேன்மைப் படுத்தி சிறப்பாக செய்ய உங்களிடம் விவரங்கள் இருந்தால் content@kmmatrimony.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.